ஜீவனாம்சம் எப்போது முதல் வழங்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும் கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஜீவனாம்சம் எப்போது முதல் வழங்க வேண்டும் என்பதை கீழ் கோர்ட்டு அதன் உத்தரவில் தெரிவிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

Update: 2018-04-13 22:30 GMT
மதுரை,

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆனந்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த முரளிவிஸ்வநாதன் என்பவருக்கும் எனக்கும் கடந்த 2009–ம் ஆண்டில் திருமணம் நடந்தது. பின்னர் என்னிடம் இருந்து பிரிந்துவிட்டார். இதனால் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவும், ஜீவனாம்சம் கேட்டும் தஞ்சை 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த கோர்ட்டு, எனக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஜீவனாம்ச தொகையை முரளிவிஸ்வநாதன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து வழங்குவதா அல்லது தீர்ப்பு பிறப்பித்ததில் இருந்து வழங்குவதா என்று கோர்ட்டு தனது தீர்ப்பில் தெரிவிக்கவில்லை. எனவே நான் வழக்கு தொடர்ந்த நாள் முதல் (அதாவது 2011–ம் ஆண்டில் இருந்து) ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் ஒய்.கிருஷ்ணன் ஆஜரானார். விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

ஜீவனாம்சம் எப்போது முதல் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவில் தெரிவிக்கவும், அதற்கான காரணத்தையும் அதில் தெரிவிக்க வேண்டும் என்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவுகள் 125 (2), 354 ஆகியவை கூறுகின்றன. ஆனால் மனுதாரர் தொடர்பான வழக்கில் அது பின்பற்றப்படவில்லை. எனவே, இந்த மனுவை சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு திருப்பி அனுப்புகிறோம். அவர்கள், மனுதாரர் வழக்கு தொடர்ந்த நாள் முதல் ஜீவனாம்சம் வழங்க வேண்டுமா அல்லது தனது உத்தரவுக்கு பின்னர் வழங்க வேண்டுமா என்பதையும், அதற்கான காரணத்தையும் தெளிவாக உத்தரவிட வேண்டும். அதுவரை மனுதாரருக்கு மாதாந்திர ஜீவனாம்ச தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்