கோவில்பட்டி அருகே பரிதாபம் பஸ்– மொபட் மோதல்; இளம்பெண் பலி கணவர் படுகாயம்

கோவில்பட்டி அருகே பஸ்– மொபட் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-04-13 20:30 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே பஸ்– மொபட் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.

பழைய இரும்பு வியாபாரி 

கேரள மாநிலம் பாலக்காடு பொய்யாமறைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (வயது 25). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி லிங்ககனி (21). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர், தன்னுடைய மனைவியுடன் நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்கு முடிவு செய்தார். அதற்காக மனைவியுடன் தனது சொந்த ஊரில் இருந்து மொபட்டில் புறப்பட்டார்.

பஸ் மோதி பலி 

நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் கோவில்பட்டியை கடந்து சத்திரப்பட்டி அருகில் வந்த போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியதாக தெரிகிறது.

இந்த விபத்தில் கணவன்– மனைவி இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த லிங்ககனி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முருகவேல் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

டிரைவர் கைது 

தகவல் அறிந்ததும், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த முருகவேலுக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் இறந்த லிங்ககனியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான மதுரை கே.புதூரைச் சேர்ந்த முத்துபாண்டியை (51) கைது செய்தனர்.

மேலும் செய்திகள்