ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3.16 கோடியில் நவீன கருவி ஒரு வாரத்தில் 24 பேருக்கு நவீன இதய சிகிச்சை அளித்து சாதனை
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3.16 கோடியில் நிறுவப்பட்டு உள்ள நவீன கருவி மூலம் ஒரே வாரத்தில் 24 நோயாளிகளுக்கு நவீன இதய சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை,
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3.16 கோடியில் நிறுவப்பட்டு உள்ள நவீன கருவி மூலம் ஒரே வாரத்தில் 24 நோயாளிகளுக்கு நவீன இதய சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டீன் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
நவீன கருவி
பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் அனைத்து நோய்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக இருதய பிரச்சினைகளுக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தற்போது ‘‘கேத் லேப்’’ எனப்படும் இதய நாளத்தில் அடைப்பு இருப்பதை கண்டுபிடிக்கும் நவீன பரிசோதனை கருவி ரூ.3 கோடியே 16 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் நிறுவப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே இந்த கருவி ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே உள்ளது என்பது பெருமைக்குரியது ஆகும். சமீபத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் கேத் லேப்பை திறந்து வைத்தார். கடந்த 6–ந்தேதி முதல் இந்த கேத் லேப் பயன்பாட்டுக்கு வந்தது.
24 பேருக்கு சிகிச்சை
இந்த கருவி மூலம் இதய நோயாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த கருவி உதவியுடன் கடந்த ஒரு வாரத்தில் 16 இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சையும், 8 நோயாளிகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டு உள்ளது.
இதயவியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் எட்வின், பேராசிரியர் அருள், உதவி பேராசிரியர்கள் பாலச்சந்திரன், செல்வகுமரன், விசுவநாதன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இருதய சிகிச்சை பெற்ற நோயாளிகளில் தென்காசி இசக்கி (வயது 42), தூத்துக்குடி மணி (50) மற்றும் நெல்லை தேனீர்குளம் சுப்பிரமணியன் (53) ஆகியோர் தற்போது நலமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு ஆகும். ஆனால் இவர்களுக்கு முற்றிலும் இலவசமாக முதல்–அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சிகிச்சை முறை மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்
‘கேத் லேப்’ கருவி மூலம் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதா? என்று துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். இதயத்தில் உள்ள ரத்த குழாய்களில் கொழுப்பு அடைத்து உள்ளதா? ரத்தம் உறைந்து உள்ளதா? மேலும் எந்த இடத்தில் அடைப்பு உள்ளது, அடைப்பின் தீவிரம் ஆகிய பல விவரங்களையும், மாரடைப்பின் அபாயத்தையும் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும்.
இதுதவிர இந்த கருவி மூலம் கழுத்து, மூளை, சிறுநீரகம், கால்கள் ஆகியவற்றின் தமனி ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியலாம். முக்கியமாக ஒருவருக்கு பக்கவாதம் வர வாய்ப்பு உள்ளதா? ரத்த குழாய்களில் வீக்கம் உள்ளதா? என்பதையும் இதில் தெரிந்து கொள்ள முடியும்.
நுரையீரலில் ரத்த உறைவு கட்டி ஏற்பட்டுள்ளதா என்பதையும், காலில் ரத்த குழாய் அடைப்பினால் அழுகல் நோய் இருக்கிறதா? என்பதையும் அறியலாம். சிறுநீரகத்தில் ரத்தக்குழாய் சுருங்கி உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பிறவியிலேயே ரத்த குழாய் அமைப்பில் மாறுபாடு உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க முடியும்.
மாரடைப்பு –பக்கவாதம்
இதயத்தமனி ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளையும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிந்து அவற்றை தடுக்க முடியும். இந்த பரிதோதனையில் ரத்தக்குழாய்களில் முப்பரிமாண படங்களாக தெளிவாக தெரிவதால் நோயை மிக சரியாக கணிக்க முடியும். தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தும் வசதியும் நமது ஆஸ்பத்திரியில் உள்ளது.
இவ்வாறு டீன் கண்ணன் கூறினார். பேட்டியின் போது இதயவியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் எட்வின் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.