கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு 11 பேர் காயம்

பொன்னமராவதி அருகே கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர்.;

Update: 2018-04-13 22:45 GMT
பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே ஆலவயலில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடத்தபடுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் மஞ்சுவிரட்டு நடத்த விழாக்குழுவினர், ஊர்பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி மஞ்சுவிரட்டு நடத்த முன்னேற்பாடு பணிகள் நடந்தது. மஞ்சுவிரட்டையொட்டி ஆலவயல் கிராமத்தினர் மிராஸ் அழகப்பன்அம்பலம் தலைமையில் பக்தர்கள் ஜவுளி, வேட்டிகளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து வேட்டைக்காரன் சுவாமிக்கு படைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கோவில் அருகே உள்ள நாத்துக்கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 600-க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே அவிழ்த்து விட்டப்பட்டது.

அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து வந்தது. அதனை மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை அருகில் நெருங்க விடாமல் தூக்கி வீசி பந்தாடியது. இதில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார்நிலையில் இருந்த அரசு ஆரம்பசுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்கள் வேட்டி, துண்டுகளை பரிசாக பெற்றனர். ஜல்லிக்கட்டை திருமயம் தொகுதி எம்.எல்.ஏ. ரகுபதி, வட்டாட்சியர் சங்கர், ஆலவயல், பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்