3 மாதங்களில் 69 பேர் விபத்தில் சாவு: போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் சாலை விபத்தில் 69 பேர் இறந்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் சாலை விபத்தில் 69 பேர் இறந்து உள்ளனர். எனவே போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
69 பேர் சாவு
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 3 மாத காலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 69 பேர் பலியாகி உள்ளனர். இதில் 63 பேர் ஹெல்மெட் அணியாதவர்கள்.
சாலை விபத்தில் உயிர் இழப்பை முழுமையாக தவிர்க்க, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் பற்றி மாவட்ட காவல்துறை சார்பில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு உள்ளது. அதில் தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியில் 81 சதவீதம் பேரும், சிப்காட் பகுதியில் 73 சதவீதம் பேரும், புதியம்புத்தூர் பகுதியில் 70 சதவீதம் பேரும், கோவில்பட்டி மேற்கு பகுதியில் 62 சதவீதம் பேரும், முறப்பநாடு பகுதியில் 55 சதவீதம் பேரும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சாயர்புரம், குளத்தூர், நாசரேத் பகுதிகளில் 11 சதவீதம் பேரும், ஆறுமுகநேரி, கயத்தாறு பகுதிகளில் 9 சதவீதம் பேரும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
கடும் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 35 சதவீதம் பேர் மட்டுமே மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிகிறார்கள். சாலை விபத்தில் உயிர் இழப்பை தடுக்க, மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
மேலும் கணக்கெடுப்பின் அடிப்படையில் குறைவான சதவீதம் ஹெல்மெட் அணிந்து செல்லும் பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தனி கவனம் செலுத்தி மக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போக்குவரத்து விதிகளை மீறினால் சட்டப்படியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.