தமிழக அரசு தொடர்ந்து போராடும்: ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம்’ அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
தமிழக அரசு தொடர்ந்து போராடும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம் என்று கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
தமிழக அரசு தொடர்ந்து போராடும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம் என்று கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
பேட்டி
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தினார். அவர் வழியில் தற்போது விவசாயிகளுக்கு நவீன வேளாண் எந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
கடந்த 5 ஆண்டுகளாக வேளாண்மை துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மானாவாரி விவசாயம், சிறுதானிய உற்பத்தியில் முழு வளர்ச்சியை பெறும் வகையில், விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்படுகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த முடியாது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை ரத்து செய்வதற்கு முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவு எடுப்பார். எனவே பொதுமக்கள் போராட்டத்தை கைவிடுங்கள்.
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்து முதல்– அமைச்சர் அழுத்தம் கொடுத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையிலும் தமிழக அரசு தொடர்ந்து போராடும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீருவோம்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.