கூட்டு பண்ணைய குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்

பொங்கலூர் அருகே கூட்டு பண்ணைய குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

Update: 2018-04-13 01:38 GMT
பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள கொடுவாயில் நடந்த விழாவில் கூட்டு பண்ணைய குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் கூட்டு பண்ணைய குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கும் விழா கொடுவாயில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி கூட்டு பண்ணைய குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு வேளாண்மை துறை சார்பில் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2017-2018-ம் ஆண்டு முதல் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கூட்டு பண்ணைய குழு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 20 பேர் கொண்ட உழவர் ஆர்வலர் குழுக்கள் 120 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 3 ஆயிரத்து 200 சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு 5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒருங்கிணைத்து 100 பேர் கொண்ட ஒரு உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பயன்பெறும் வகையிலும், விவசாயிகள் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 32 இடங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குழுக்களுக்கும் தலா ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் கருவிகள் வாங்க மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகையை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

முன்னதாக பொங்கலூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வேளாண்மை துறை சார்பில் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரத்து 630 மானியத்தில் வழங்கப்பட்ட தெளிப்பு நீர் பாசன கருவி, கொசவம்பாளையத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்ட தண்ணீர் எடுத்துச்செல்லும் குழாய், கொசவம்பாளையம் மற்றும் செங்கோடம்பாளையம் ஆகிய இடங்களில் ரூ.87 ஆயிரத்து 500 மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள வெங்காய சேமிப்பு கிடங்கு, கண்டியன் கோவிலில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் மானிய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் மோட்டார் உள்பட பல்வேறு திட்டங் களை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது வேளாண்மை துறை இணை இயக்குனர் முகமது இக்பால், துணை இயக்குனர்கள் தமிழ்செல்வன், அரசப்பன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுகந்தி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் தண்டபாணி, பொங்கலூர் வட்டார வேளாண்மை அலுவலர் ராம் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலர், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்