ஈரோட்டில் மில் உரிமையாளர் வீட்டில் திருடிய வேலைக்கார பெண் கைது 32 பவுன் நகை மீட்பு

ஈரோட்டில் மில் உரிமையாளர் வீட்டில் திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து, 32 பவுன் நகையை மீட்டனர்.

Update: 2018-04-12 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு வீரபத்ரவீதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 63). எண்ணெய் மில் உரிமையாளர். இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணமாகி வெளிமாநிலத்தில் வசித்து வருகிறார்கள். சந்திரசேகரும், மல்லிகாவும் ஈரோட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த தனலட்சுமி (50) என்பவர் வீட்டு வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் சந்திரசேகரும், மல்லிகாவும் கடந்த மாதம் பெங்களூரு சென்றுவிட்டு ஈரோட்டிற்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 32 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வெளிநபர்கள் வீட்டிற்கு வந்து திருடியதற்கான தடயங்கள் இல்லாததால், வீட்டில் இருந்த ஒருவரே நகையை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வீட்டில் வேலை செய்த தனலட்சுமியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து தனலட்சுமியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 32 பவுன் நகையை மீட்டனர்.

மேலும் செய்திகள்