பாடம் நடத்தும் போது கவனிக்காததால் 10-ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது
பாடம் நடத்தும் போது கவனிக்காமல் இருந்த 10-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கினார்.
பெங்களூரு,
பாடம் நடத்தும் போது கவனிக்காமல் இருந்த 10-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கினார். இதையடுத்து, தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மாணவன் மீது தாக்குதல்
பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் வெங்கட சுப்பையா (வயது 32). கோடை விடுமுறை முடியும் முன்பாகவே அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அதுபோல, நேற்று முன்தினம் நடந்த வகுப்பின் போது ஆசிரியர் வெங்கட சுப்பையா, மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், பாடம் நடத்துவதை கவனிக்காமல் மற்றொரு மாணவருடன் பேசிக் கொண்டிருந்தான்.
இதை பார்த்த வெங்கட சுப்பையா கடும் ஆத்திரமடைந்தார். உடனே அந்த மாணவனை பிடித்து சரமாரியாக தாக்கினார். மேலும் கன்னத்திலும் பல முறை அறை விட்டார். இதில், அந்த மாணவனின் காதில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பெற்றோர் நேற்று முன்தினம் இரவு தங்களது மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
ஆசிரியர் கைது
மேலும் நேற்று காலையில் தனியார் பள்ளிக்கு சென்ற மாணவனின் பெற்றோர், அவனை தாக்கியது குறித்து பள்ளியின் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அத்துடன் வித்யாரண்யபுரா போலீஸ் நிலையத்தில் ஆசிரியர் வெங்கட சுப்பையா மீது புகார் கொடுத்தனர். உடனே பள்ளிக்கு சென்று போலீசார் விசாரித்தனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தார்கள். அப்போது ஆசிரியர் வெங்கட சுப்பையா, அந்த மாணவனை சரமாரியாக அடித்து, தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து, வித்யாரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் வெங்கட சுப்பையாவை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் கன்னட தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி நேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.