பா.ஜனதா நடத்திய உண்ணாவிரதம் கேலிக்கூத்தானது காங்கிரஸ் கடும் விமர்சனம்

பா.ஜனதா நடத்திய உண்ணாவிரதம் கேலிக்கூத்தானது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

Update: 2018-04-12 21:45 GMT
பெங்களூரு, 

பா.ஜனதா நடத்திய உண்ணாவிரதம் கேலிக்கூத்தானது என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் குழு தலைவர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகப்பெரிய நாடகத்தை...

மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தோல்வி அடையும். அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயம் பிரதமர் மோடி உள்பட அக்கட்சியின் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஊடகங்களுக்கு ‘போஸ்‘ கொடுக்க வேண்டும், பத்திரிகைகளில் தலைப்பு செய்தியில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரதம் என்ற பெயரில் மிகப்பெரிய நாடகத்தை பா.ஜனதா தலைவர்கள் அரங்கேற்றி உள்ளனர். நாடாளுமன்றம் செயல்படவில்லை என்று கூறி பா.ஜனதா ஒரு போலியான உண்ணாவிரதத்தை நடத்தி இருக்கிறது.

250 மணி நேரத்தை...

இதன் மூலம் பிரதமர் மோடியும், பா.ஜனதாவும் நமது நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக கோவிலான நாடாளுமன்றத்தை சிறுமைப்படுத்திவிட்டனர். அந்த கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தடுத்தனர். இப்போது மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்தும், அதன் பெருமையை குலைக்கிறார்கள். 2009-2014-ம் ஆண்டு வரை இருந்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்றத்தின் மொத்த கூட்டத்தொடரில் 250 மணி நேரத்தை பா.ஜனதா நடத்தவிடாமல் வீணடித்தது.

ஜனநாயகத்திற்கு அவமானத்தை இழைத்த மோடி அரசு மற்றும் பா.ஜனதா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற நோக்கத்திலேயே திட்டமிட்டே கூட்டத்தை நடத்தவிடாமல் செய்தனர். ரூ.63 ஆயிரத்து 690 கோடி வங்கி மோசடி பொறுப்பை தட்டி கழிக்க வேண்டும் என்று கருதி நாடாளுமன்றத்தை சரியாக நடத்தவில்லை.

தென்இந்தியாவுக்கு அநீதி

வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ்மோடி, சோக்சி, ஜெதின்மேதா குறித்து பா.ஜனதா பதில் அளிக்கவில்லை. ரபேல் போர் விமானங்கள் கொள்முதலுக்கு கூடுதலாக ரூ.58 ஆயிரம் கோடி வழங்கியதற்கு பா.ஜனதா காரணம் கூறவில்லை. 24 லட்சம் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய சி.பி.எஸ்.இ. தேர்வு கேள்வித்தாள் கசிந்தது பற்றி அந்த கட்சி பேசவில்லை. விவசாயிகளின் கஷ்டங்கள் குறித்து அக்கட்சி பேசவில்லை.தலித் மற்றும் பழங்குடியின சட்டத்தின் தீவிரத்தை குறைக்க பா.ஜனதா அரசு அனுமதித்துள்ளது. 15-வது நிதி குழுவில் தென்இந்தியாவுக்கு மிகப்பெரிய அநீதியை பா.ஜனதா இழைத்துள்ளது. ஆந்திரம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வாக்குறுதியை பா.ஜனதா செயல்படுத்தவில்லை. கர்நாடகத்தில் மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க பா.ஜனதா அனுமதிக்கவில்லை.

கேலிக்கூத்தான உண்ணாவிரதம்

கன்னட மக்களை தரக்குறைவாக பேசிய கோவா மந்திரியை பா.ஜனதா நீக்கவில்லை. இதையெல்லாம் செய்யாமல் பா.ஜனதா ஒரு கேலிக்கூத்தான உண்ணாவிரதத்தை நடத்தி முடித்துள்ளது. மோடி, மக்களின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிவிட்டனர்.

இதன் காரணமாக பா.ஜனதா மக்களை பிரித்தாளும் கொள்கைக்கு திருப்பியுள்ளது. மக்களை மதம், மொழி, சாதி, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, சரும வண்ணம், பின்தங்கிய, கீழ்தட்டு, மேல்தட்டு, தலித் மற்றும் தலித் அல்லாதோர் என்று பிரிக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

வனவாசம் செல்வது உறுதி

கடைசியில் இந்தியாவின் தனித்துவமான சகோதரத்துவம், நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பை பா.ஜனதா காலில் போட்டு மிதித்துவிட்டது. பிரதமர் மோடி தனது ஆட்சியில் இருந்து வெளியேறும் காலம் தொடங்கிவிட்டது என்பதை அவர் உணர வேண்டும். அடுத்த ஆண்டு(2019) மோடி வனவாசம் செல்வது உறுதி.

இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.

மேலும் செய்திகள்