அகண்ட சீனிவாசமூர்த்தி உள்பட 7 பேருக்கும் காங்கிரசில் டிக்கெட் கிடைப்பது உறுதி
அகண்ட சீனிவாச மூர்த்தி உள்பட 7 பேருக்கும் காங்கிரசில் டிக்கெட் கிடைப்பது உறுதி என்று சித்தராமையாவை சந்தித்து பேசிய பிறகு ஜமீர்அகமதுகான் கூறினார்.
பெங்களூரு,
அகண்ட சீனிவாச மூர்த்தி உள்பட 7 பேருக்கும் காங்கிரசில் டிக்கெட் கிடைப்பது உறுதி என்று சித்தராமையாவை சந்தித்து பேசிய பிறகு ஜமீர்அகமதுகான் கூறினார்.
அகண்ட சீனிவாசமூர்த்தி
எம்.எல்.ஏ.க்களாக இருந்த ஜமீர்அகமதுகான், செலுவராயசாமி, அகண்ட சீனிவாசமூர்த்தி உள்பட 7 பேர் ஜனதா தளம்(எஸ்) கட்சியை விட்டு விலகி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தனர். அவர்கள் 7 பேருக்கும் டிக்கெட் வழங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா உறுதியளித்தார். இதனால் அவர்களுக்கு காங்கிரசில் டிக்கெட் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த அகண்ட சீனிவாசமூர்த்திக்கு டிக்கெட் கிடைக்காது என்று தகவல்கள் வெளியாயின. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜமீர்அகமதுகான் மற்றும் அகண்ட சீனிவாசமூர்த்தி ஆகியோர் பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினர்.
டிக்கெட் உறுதியாகிவிட்டது
அப்போது அகண்ட சீனிவாசமூர்த்திக்கு டிக்கெட் கிடைக்காது என்று வெளியான தகவல் குறித்து அவர்கள் கேட்டனர். அகண்ட சீனிவாசமூர்த்திக்கு டிக்கெட் உறுதியாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பின் ஜமீர்அகமதுகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “அகண்ட சீனிவாசமூர்த்திக்கு டிக்கெட் கிடைக்காது என்று வெளியான தகவல் தவறானது. காங்கிரசில் சேர்ந்த எங்கள் 7 பேருக்கும் டிக்கெட் உறுதியாகிவிட்டது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை“ என்றார்.