நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தடுப்பதாக கூறி காங்கிரசை கண்டித்து பெங்களூருவில் மத்திய மந்திரிகள் உண்ணாவிரதம்

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தடுப்பதாக கூறி காங்கிரசை கண்டித்து பெங்களூருவில் மத்திய மந்திரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2018-04-12 22:00 GMT
பெங்களூரு, 

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தடுப்பதாக கூறி காங்கிரசை கண்டித்து பெங்களூருவில் மத்திய மந்திரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தவறான குற்றச்சாட்டுகளை...

நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பதாக கூறி காங்கிரசை கண்டித்து நேற்று நாடு முழுவதும் பா.ஜனதா எம்.பி.க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதே போல் கர்நாடகத்தில் பா.ஜனதா சார்பில் பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் அனந்தகுமார், பிரகாஷ் ஜவடேகர், சதானந்தகவுடா, பி.சி.மோகன் எம்.பி. மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:-

பா.ஜனதா மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அன்பு மற்றும் மத்திய அரசின் ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகத்தை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக தவறான குற்றச்சாட்டுகளை கூறி நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் தடுக்கிறது. காங்கிரசின் இந்த ஜனநாயக விரோத போக்குக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

பாடம் புகட்டுவார்கள்

காங்கிரஸ் ஊழல் கட்சி. அந்த கட்சிக்கு எதிராக பா.ஜனதா போராடி வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆகாயம் முதல் பாதாளம் வரை எல்லா இடங்களிலும் ஊழல் நடைபெற்றது. இதை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு மவுனமாக இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது எங்கள் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். இது சரியா?.

ஊழலை தடுக்க விருப்பம் இல்லாத காங்கிரஸ், லோக்பால் அமைப்பதையும் தடுக்கிறது. 2-ஜி அலைக்கற்றை, காமன்வெல்த் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களால் தான் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் தனது போக்கை இப்போதாவது மாற்றிக்கொள்ளாவிட்டால் கர்நாடக சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் பேசினார்.

தேர்தல் மாயாஜாலம்

அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி அனந்தகுமார் பேசியதாவது:-

ஜனநாயகத்தை அழிக்கவே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ரகுல் காந்தி பதவி ஏற்றுள்ளார். ஏனென்றால் காந்தி குடும்பத்தின் மரபணுவில் இந்த குணம் அடங்கியுள்ளது. இந்து மதம், மடங்கள், கோவில்களை பற்றி ராகுல் காந்தி கேவலமாக பேசினார். ஆனால் அவர் இப்போது அதே மடங்கள், கோவில்களுக்கு செல்கிறார். இது தேர்தல் மாயாஜாலம். கர்நாடக மக்கள் ராகுல் காந்தியின் இத்தகைய நாடகத்தை நம்ப முட்டாள்கள் இல்லை. அவருடைய கபட நாடகம் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

நாடாளுமன்ற கூட்டம் 33 நாட்கள் நடைபெற்றது. இதில் ஒரு நாள் கூட சுமூகமாக நடைபெறவில்லை. வேலை செய்யாத எங்களுக்கு சம்பளம் வேண்டாம் என்று பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூறிவிட்டனர். அதே போல் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்த காங்கிரஸ் கட்சியினர் தங்களின் சம்பளத்தை விட்டுக்கொடுக்க தயாரா?.

உண்மையான முகம்

பிரதமர் மோடியின் தலைமை தார்மிக ரீதியிலானது. ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் சித்தராமையாவின் தலைமை தார்மிக ரீதிக்கு எதிரானது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியினர் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சென்று உண்ணாவிரதம் இருந்தனர். இது தான் காங்கிரசின் உண்மையான முகம். பிரதமர் மோடி இன்று (அதாவது நேற்று) எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார்.

இவ்வாறு அனந்தகுமார் பேசினார்.

இதில் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் பேசுகையில், “கர்நாடகத்தில் ஆட்சி காலத்தின் கடைசி நிலையில் உள்ள காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் குதிகாலில் நிற்கிறார்கள். அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி காங்கிரசுக்கு கவுண்ட்டவுன் தொடங்கி 15-ந் தேதி நிறைவடையும். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் பெயரில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் எந்த சமூகத்திற்கும் எதுவும் செய்யவில்லை“ என்றார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜனதாவை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்