காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆற்றில் இறங்கி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, குமாரபாளையத்தில் தி.மு.க.வினர் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். மேலும் கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டனர்.

Update: 2018-04-12 23:00 GMT
குமாரபாளையம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், அந்த வாரியத்தை அமைக்க தாமதப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.வினர் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் இறங்கி கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்காக கருப்பு சட்டை அணிந்த அந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காலை 10.30 மணி அளவில் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.

கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.எஸ்.மாணிக்கம், தொழில் அதிபர் கே.எஸ்.இளவரசு, நகராட்சி முன்னாள் தலைவர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரபாளையம் நகர செயலாளர் வெங்கடேசன், பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், தி.மு.க. நிர்வாகிகள் பரமசிவம், சிவகுமார், ரவி, ஆனந்தன், ஓ.ஆர்.செல்வம், ஜெயப்பிரகாஷ், அன்பழகன் உள்பட கட்சியினர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்சியினர் கோஷம் எழுப்பினர். மேலும் கருப்பு பலூன்களை கையில் பிடித்தவாறு ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.

சேலம் மெயின்ரோடு, எடப்பாடி மெயின்ரோடு வழியாக சென்று காவேரி நகர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி, தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். அங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய அவர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்