காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து மோட்டார் சைக்கிள் பேரணி
நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
நெல்லை,
நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நெல்லை மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகம், பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம், நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகம், நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகம், இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.
டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. சட்டமன்ற அலுவலகம் பாளையங்கோட்டை, மேலப்பாளையத்தில் உள்ளது. அந்த அலுவலகங்களில் மைதீன்கான் எம்.எல்.ஏ. கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏற்றினார். பின்னர் அங்கு கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன. அப்போது ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.
மோட்டார் சைக்கிள் பேரணி
தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது. கிழக்கு மாவட்ட தி.முக. செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நிஜாம் (மாநகர்), தி.மு.ராஜேந்திரன் (புறநகர்) ஆகியோர் முன்னிலை வகித்தார்.
பேரணி நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் அருகே வந்த போது நிர்வாகிகள் திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அவர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தங்கள் எதிர்பை தெரிவித்தனர். அமைத்திடு, அமைத்திடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்று கூட்டணி கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினால், கைது செய்வோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் அங்கு இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி புறப்பட்டது. பேரணி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் 4 ரத வீதிகளை சுற்றி வந்து நெல்லை டவுனில் உள்ள லட்சுமணன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நிறைவடைந்தது. தி.மு.க. கூட்டணி கட்சியினர் திடீர் மோட்டார் சைக்கிள் பேரணியால் நெல்லை சந்திப்பு பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வாகனங்களை ஒழுங்கு படுத்தி அனுப்பி வைத்தனர்.
மனிதநேய மக்கள் கட்சியினர்
மேலப்பாளையத்தில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் தலைமையில் கருப்பு கொடி ஏற்றி, கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அப்போது கட்சி நிர்வாகிகள் அணைவரும் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே தமிழகத்தை வஞ்சிக்காதே, அமைத்திடு, அமைத்திடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் உஸ்மான்கான், நிர்வாகிகள் பிலால், சுல்தான், ரசூல், ஜமால், மைதீன்பாதுஷா, ஜமால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சங்கர்நகர், தாழையூத்து, பண்டார குளம் உள்ளிட்ட கிராமங்களிலும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.