கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மீண்டும் செயல்பட கலெக்டர் நடவடிக்கை

முள்ளிமுனை ஊராட்சியில் முடங்கிக்கிடந்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாவட்ட கலெக்டர் நடராஜன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Update: 2018-04-12 22:15 GMT
தொண்டி,

திருவாடானை யூனியன் முள்ளிமுனை ஊராட்சியில் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. கடற்கரை கிராமம் என்பதாலும் கடைக்கோடி கிராமமாக இருப்பதாலும் இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் பிரச்சினை என்பது காலங்காலமாக தீர்க்கப்பட முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் திட்டம் முடங்கி போனதால் சில வருடங்களாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

இருப்பினும் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கப்படவில்லை. இதனால் இங்குள்ள பொதுமக்கள் தினமும் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வந்து விற்கப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ.5 விலைகொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு தினமும் ரூ.100 முதல் ரூ.200 வரை செலவு செய்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு முள்ளிமுனை ஊராட்சியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.1½ கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஊராட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவால்கள் இருந்து வந்தது. இத் திட்டத்தின் மூலம் கடந்த காலங்களில் 2 நாட்களுக்கு ஒருமுறை சுமார் 40,000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுஉள்ளது.

இத்திட்டத்தை செயல் படுத்த பயிற்சி முடித்த ஒரு ஆபரேட்டர், மின் கட்டணம், பழுதுபார்க்கும் செலவுகள், இதர செலவுகள், பராமரிப்பு என மாதம் ரூ.50,000 வரை ஊராட்சிக்கு தேவைப்பட்டது. மேலும் போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலையில் ஊராட்சியின் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மிகுந்த சிரமங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென மோட்டார் மற்றும் எந்திரங்கள் பழுது ஏற்பட்டால் டென்மார்க்கில் இருந்து தான் இதற்கு தேவையான உதிரி பாகங்கள் வர வேண்டும். அதுவரை குடிநீர் வழங்க இயலாத சூழ்நிலை இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக இத்திட்டம் முடங்கி போனது.

இந்த நிலையில் இத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் நேரடியாக செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் இதற்கு தேவையான அனைத்து செலவுகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்று அதற்கான நிதியை மாதந்தோறும் ஊராட்சிக்கு வழங்கி பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீரை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் நடராஜன் முள்ளிமுனை ஊராட்சியில் அனைத்து துறை அதிகாரிகளுடன் குடிநீர் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மீண்டும் முள்ளிமுனை ஊராட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இத்திட்டத்தின் மூலம் இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டரின் ஆய்வுக்கு பின்னர் கடந்த ஒரு வாரமாக காவிரி குடிநீர் சுமார் 60,000 லிட்டர் தினமும் இந்த ஊராட்சிக்கு வினியோகம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்