100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த கோரி தமிழ்நாடு விவசாயி சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-04-12 23:00 GMT
கொட்டாம்பட்டி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 100 வேலை திட்டம் சீர்குலைந்து வருவதாகவும், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளிலும் முறையாக 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி, தகுதியுடைவர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும்.

வேலைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை அட்டை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மேலூர் தாலுகா தலைவர் ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில தலைவர் பழனிசாமி கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேலூர் செயலாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய ஆணையாளரிடம் மனு கொடுத்து, அதன் மீதான நடவடிக்கையை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

மேலூர் தாலுகாவில் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்த திட்டத்தில் வேலை பார்த்த பல ஆயிரம் கிராம பெண்கள் வேலைவாய்ப்பு இழந்து அவதிப்படுகின்றனர். வறட்சியினால் விவசாய வேலைகளும் இன்றி வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். இந்தநிலையில் மேலூர் தாலுகாவில் மீண்டும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மேலூர் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி கோஷமிட்டனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கருப்பு பட்டை அணிந்திருந்தனர். இதில் கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் அடக்கிவீரன், மாதர் சங்க மாவட்ட தலைவி மோகனவிஜயா, நிர்வாகிகள் அடைக்கன், கதிரேசன், அழகர்சாமி, தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பாக 100 நாள் வேலை வழங்க கோரி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஒன்றிய ஆணையாளரிடம் மனுக்கள் கொடுத்தனர்.

இதுகுறித்து ஆணையாளர் கூறியதாவது:- 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் குளம் மற்றும் கண்மாய், வரத்து கால்வாய்கள், தூர்வாருவது ஆகிய வேலைகள் மட்டும் வழங்க கோரி மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு பதிலாக மாற்றுபணியாக பண்ணைக்குட்டை அமைத்தல், தனிநபர் வயல் வரப்பு கட்டுதல், ஓடைவரத்து கால்வாய் தடுப்பு அணைகட்டுதல், பசுமை வீடுகள், அனைவருக்கும் வீடுகள் கட்டுதல், மரக்கன்றுகள் வைத்தல் ஆகிய பணிகளை செய்ய கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்