ஆலந்தூரில் சரிந்து விழும் நிலையில் உள்ள மின்சார பெட்டியால் மக்கள் அச்சம்
ஆலந்தூரில் சரிந்து விழும் நிலையில் உள்ள மின்சார பெட்டியால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.;
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆலந்தூர் மின்சார வாரிய அலுவலகத்தின் எதிரே உள்ளது மார்கோ தெரு. இந்த தெருவில் உள்ள மின்சார பெட்டி சாலையில் தரைதட்டிய நிலையில் இருந்தது.
சென்னையில் கடந்த ஆண்டு மழை பெய்த போது, தரையில் இருக்கும் மின்சார பெட்டிகளை 2 அடி உயரத்திற்கு ஏற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி சென்னை மாநகரில் உள்ள அனைத்து மின்சார பெட்டிகளும் உயர்த்தப்பட்டன.
அதுபோல் தான் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆலந்தூர் மார்கோ தெருவில் இருந்த மின்சார பெட்டியும் உயர்த்தப்பட்டது.
சரிந்து விழும் நிலை
ஆனால் உயர்த்தப்பட்ட சில தினங்களிலேயே அந்த மின்சார பெட்டி சரிந்து விழும் நிலைக்கு உள்ளானது.
இது பற்றி மின்சார வாரியத்திற்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 3 மாதங்களாகியும் மின்சார பெட்டியை சீரமைக்க அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இந்த மின்சார பெட்டி அமைந்து உள்ள சாலையில் ரேஷன்கடைகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் இந்த பகுதிக்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள்.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, அப்பகுதியினர் மின்சார பெட்டிக்கு மரக்கம்புகளை முட்டு கொடுத்து நிறுத்தி உள்ளனர்.
இருப்பினும் மின்சார பெட்டி எப்போது சரிந்து விழுமோ? என்கிற அச்சத்தில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே மின்சார வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.