கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவு கருத்து கேட்பு கூட்டம்: மீனவ மக்கள் புறக்கணிப்பு உவரியில் பரபரப்பு
உவரியில் நேற்று நடைபெற இருந்த கடற்கரை மேலாண்மை திட்ட வரைவு கருத்து கேட்பு கூட்டத்தை மீனவ மக்கள் புறக்கணித்து வெளி.யேறினர். இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளை,
உவரியில் நேற்று நடைபெற இருந்த கடற்கரை மேலாண்மை திட்ட வரைவு கருத்து கேட்பு கூட்டத்தை மீனவ மக்கள் புறக்கணித்து வெளி.யேறினர். இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்து கேட்பு கூட்டம்
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவை சார்பில், நெல்லை மாவட்டத்திற்கான 9 முதல் 13 வரையிலான வரைபடங்கள் மற்றும் அதை சார்ந்த கடற்கரை மண்டல வகைகள் வரைவு, கடலோர மண்டல மேலாண்மை திட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் உவரி பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், ராதாபுரம் தாசில்தார் முகமது புகாரி மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம், மீன்வளத்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூட்டம் நடைபெற இருந்த கட்டிடத்துக்கு வந்தனர்.
கோரிக்கை
கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், உவரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் அந்தோணி, ரைமண்ட், கூட்டப்புளி ஊர்த்தலைவர் அல்போன்ஸ், தமிழ்நாடு மீனவர் பேரவை நெல்லை மாவட்ட தலைவர் மானுஷா, கூத்தன்குழி மீனவர் சங்க தலைவர் அலங்காரம், இடிந்தகரை ஊர்நலக்குழு தலைவர் செல்சன், சகாய இனிதா, பெருமணல் கிரகோரி, ஜெரால்ட், தோமையார்புரம் ஆரோக்கியம், அருட்செல்வம், கூடுதாழை, கூட்டப்பனை மற்றும் நெல்லை மாவட்ட கடற்கரை கிராம மீனவர்கள் மற்றும் பெண்கள் கூறுகையில்,‘ பாரம்பரிய மீனவ மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் இந்த கடற்கரை மண்டல மேலாண்மை வரைவு இருக்கிறது. இத்திட்டத்தை உருவாக்கும் போதே மீனவர்களிடம் விவாதிக்க வேண்டும். சட்டவரைவின் முழுவடிவம் தமிழில் வெளியிடப்பட வேண்டும். இது அடிப்படையில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி இருக்கிறது. மீனவர்களுடைய தொழில் நடவடிக்கை இடங்கள் காட்டப்படவில்லை. வரைபடம் பொறுப்பற்ற தன்மையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அபாயகோடு காட்டப்படவில்லை. 1996 வரைபடத்தை பின்பற்றாததற்கு காரணம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தினர்.
கூட்டம் ரத்து
பின்னர், உடனடியாக இந்த சட்ட அறிவிப்பாணையையும், வரைபடத்தையும் திரும்ப பெற கோரி மீனவ மக்களும் பிரதிநிகளும் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கூட்டத்தை ரத்து செய்து விட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.