காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-12 21:00 GMT
சங்கரன்கோவில், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவிலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தி.மு.க. கூட்டணி போராட்டம் 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக அந்த வாரியத்தை அமைக்க கோரியும், பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் மற்றும் கருப்பு பலூன்களை பறக்க விட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான வீடுகள், மார்க்கெட்டுகள், கடைகளில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கருப்பு பலூன்கள் 

சங்கரன்கோவில் தேரடி திடலில், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில், கருப்பு பலூன் பறக்கவிடும் போராட்டம் நடைபெற்றது. மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் சங்கரன், ம.தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பீர்மைதீன், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் உமாசங்கர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் பிரதமர் மோடியின் உருவப்படத்துடன் கருப்பு நிற பலூன்களை பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

 இதில் தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி மாரிச்சாமி, ம.தி.மு.க. நிர்வாகிகள் பூக்கடை பொன்னுச்சாமி, சசிமுருகன், மார்க்சிஸ்ட் கட்சி மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு, பல வீடுகள், கடைகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருந்தது.

பாவூர்சத்திரம்–சிவகிரி 

பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகில் உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருந்தது.

சிவகிரி நகர தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக பஸ்நிலையம் முன்பாக கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் தலைமை தாங்கினார்.

வாசுதேவநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்தையா பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் குருசாமி, மாவட்ட உறுப்பினர் கதிரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு, தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் மாரித்துரை, நகர பொருளாளர் மணி என்ற தமிழன்பன் ஆகியோ£ முன்னிலை வகித்தனர். தி.மு.க நகர அவைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தொண்டரணி சேகர், துணை செயலாளர் முனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

தென்காசி 

தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் கருப்பு கொடி ஏற்றினார். இதில் தி.மு.க. அவை தலைவர் முத்துப்பாண்டி, நகர செயலாளர் சாதிர், நிர்வாகிகள் மோகன் ராஜ், சாமித்துரை, ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி மவுண்ட் ரோடு பகுதியில் சில கடைகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

 தென்காசி அருகே உள்ள வடகரையில் பல வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டைகள் மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க மாநில மாணவர் அணி செயலாளர் எம்.ஏ.எம்.ஷெரிப் தலைமை தாங்கினார். அவை தலைவர் அமானுல்லா, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ஜாகிர் உசேன், தி.மு.க மாவட்ட பிரதிநிதி கனியப்பா, ஒன்றிய அவை தலைவர் பாப்பா, மீரா உசேன், சாகுல் ஹமீது மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கட்சியினரின் வாகனங்களிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்