ஆக்கிரமிக்கப்பட்ட 1¾ ஏக்கர் அரசு நிலம் மீட்பு வருவாய் துறை நடவடிக்கை

பந்தலூரில் ஆக்கிரமிக்கப்பட்ட 1¾ ஏக்கர் பரப்பளவிலான அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.

Update: 2018-04-12 22:15 GMT
பந்தலூர்,

பந்தலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அட்டி செல்லும் சாலையோரம் அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வாழை உள்ளிட்ட விவசாயம் செய்வதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பின்னர் 1¾ ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன் அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் நில ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி கூடலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஆக்கிரமிப்பாளர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது. இதையொட்டி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பந்தலூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், யுவராஜ், ஸ்ரீஜா உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று காலை 6 மணிக்கு அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கினர்.

அப்போது அங்கு பயிரிட்டு இருந்த விவசாய பயிர்களை வெட்டி அகற்றினர். தொடர்ந்து அரசு நிலம் மீட்கப்பட்டது. பின்னர் அரசு நிலம் என பெயர் பலகையை பொருத்தினர். முன்னதாக தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜவேல் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்