குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க திருடிய சகோதரிகள்

கோவையில் பஸ்களில் செல்லும் பயணிகளிடம் நகை பறித்த சகோதரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், போலீசிடம் சிக்காமல் இருக்க பர்தா அணிந்து கைவரிசை காட்டியதும் அம்பலமானது.

Update: 2018-04-13 00:00 GMT
கோவை,

கோவை மாநகர பகுதியில் பஸ்களில் செல்லும் பயணிகளிடம் நகை பறிப்பு, கைப்பை, பணம் ஆகியவை திருடப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவுக்கு புகார் சென்றது. இதையடுத்து பஸ்களில் கைவரிசை காட்டுபவர்களை பிடிக்க துணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டு உமா, போலீசார் கார்த்தி, சர்மிளா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் கூட்டம் அதிகமாக இருக்கும் பஸ்களில் சென்று கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த வசந்தி (வயது 57) என்பவர் பூ மார்க்கெட்டில் இருந்து கிராஸ்கட் ரோட்டிற்கு செல்ல பஸ்சில் ஏறினார். அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டபோது, வசந்தி திடீரென்று தனது கழுத்தில் கிடந்த நகையை காணவில்லை என்று சத்தமிட்டார்.

உடனே அந்த பஸ்சில் இருந்த தனிப்படையினர் வசந்தியிடம் விசாரித்தபோது, தனது அருகில் பர்தா அணிந்தபடி 3 பெண்கள் நின்றனர். அவர்கள் மீதுதான் சந்தேகம் இருக்கிறது என்று கூறினார். இதையடுத்து தனிப்படை போலீசார் கூட்டம் அதிகமாக இருக்கும் பஸ்களில் சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்கள்.

அப்போது ஒரு பஸ்சில் போலீசார் பயணித்தபோது, அங்கு 3 பேர் பர்தா அணிந்தபடி நின்றனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது, மதுரை அருகே உள்ள சோழவந்தானை சேர்ந்த சசியின் மனைவி முனியம்மாள் (38), அவருடைய சகோதரிகள் மீனாட்சி (28), பிரியா (25) என்பதும், கூட்டமாக இருக்கும் பஸ்களில் ஏறி பயணிகளிடம் நகை-பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது.

எங்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. 3 பேருக்கும் தலா 2 குழந்தைகள் உள்ளன. அவர்களை வசதிபடைத்தவர்களின் குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளியில் படிக்க வைக்கவும், ஆடம்பரமாக வாழவும் ஆசைபட்டு திருட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்காக திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் பஸ்களில் பயணம் செய்து பெண்களிடம் இருந்து நகையை பறித்துள்ளனர்.

அங்கு 3 பேரும் மீது பல்வேறு வழக்குகள் உள் ளன. எனவே போலீசார் கைது செய்து விடுவார்கள் என்பதால் இடத்தை மாற்ற முடிவு செய்து தொழில் நகரான கோவைக்கு வந்துள்ளனர். அப்போது பஸ்களில் பலர் பர்தா அணிந்தபடி சென்றதை பார்த்த அவர்கள் பர்தா அணிந்து சென்றால் போலீஸ் பிடியில் சிக்கிக்கொள்ள மாட்டோம் என்று நினைத்து கைவரிசை காட்ட தொடங்கி உள்ளனர்.

பணம் மற்றும் நகையை பறித்ததும், கோவையில் ஒரு இடத்தில் காத்திருக்கும் அவர்களின் கணவர்களிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் ஊருக்கு சென்று நகையை விற்று விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை வாங்கி இருக்கிறார்கள். திருடிய பணத்தில் அனைவரும் ஆடம்பர வாழ்க்கை நடத்தி உள்ளனர். மேலும், அவர்களிடம் யாராவது பெயர் கேட்டால் உண்மையான பெயரை கூறவில்லை. இருந்தபோதிலும் போலீசார் கண்காணித்து கைது செய்து விட்டனர்.

திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் பர்தா அணிந்து வந்தபோதிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படையை சேர்ந்த போலீசாரை போலீஸ் கமிஷனர் பெரியய்யா, துணை கமிஷனர் லட்சுமி ஆகியோர் பாராட்டினார்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முனியம்மாளின் கணவர் சசி, மீனாட்சியின் கணவர் மணி, பிரியாவின் கணவர் சதீஷ் ஆகியோரையும் தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்