ஐகோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணி தொடக்கம்

ஐகோர்ட்டு உத்தரவின்படி அறந்தாங்கியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணி தொடக்கம்

Update: 2018-04-12 22:30 GMT
அறந்தாங்கி,

அறந்தாங்கி நகரில் வண்ணான்குளம் பகுதி ஒரு காலத்தில் முக்கியமான நீர்நிலையாக விளங்கியது. இந்த குளத்தில் தான் சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து வந்தனர். இதனால் இந்த குளத்திற்கு வண்ணான்குளம் என்ற பெயர் ஏற்பட்டது. நாளடைவில் இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், சலவை தொழிலாளர்கள் இந்த குளத்தில் துணி துவைப்பதை நிறுத்தினர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி சார்பில் தினசரி சந்தை கட்டப்பட்டது. இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து 50-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றக் கோரி சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி வண்ணான்குளத்தில் செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அறந்தாங்கி தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில், நகராட்சி ஆணையர் நவேந்திரன் முன்னிலையில், வண்ணான்குளம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கடைகளை பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அகற்றும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக கடைகளின் முன்பு போடப்பட்டிருந்த கூரைகள் அகற்றப்பட்டன. அறந்தாங்கி வண்ணான்குளம் பகுதியில் நேற்று திடீரென்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்