கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம் இன்று நடக்கிறது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Update: 2018-04-12 20:45 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

பங்குனி திருவிழா 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி– அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு திருநாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர் சார்பில் கொண்டாடப்படுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9–ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) கம்மவார் சங்கம் சார்பில் நடக்கிறது. காலை 6 மணிக்கு ரதாரோகனம் பூஜை நடக்கிறது. காலை 7.15 மணிக்கு கம்மவார் திருமண மண்டபத்தில் இருந்து தேர்வடம் பிடிக்க புறப்படுதல், காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. கம்மநாயுடு மகாஜன சங்க தலைவர் ரவீந்திரன் தலைமையில், செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

ஏற்பாடுகளை கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன், செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் நாராயணசாமி, துணை தலைவர் ராமச்சந்திரன், இணை செயலாளர் பட்டுராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தெப்பத்திருவிழா 

10–ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில், தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. 11–ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், தெப்ப திருவிழா நடக்கிறது.

மேலும் செய்திகள்