மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து: பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் தலை நசுங்கி சாவு

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவரின் கண் எதிரேயே தலை நசுங்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-04-12 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 51). துணி தைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி விஜி சகாயா (45). இவருடைய சொந்த ஊர் பேச்சிப்பாறை பள்ளிமுக்கு ஆகும். தற்போது இவர்கள் பேச்சிப்பாறை பள்ளி முக்கு பகுதியில் வசித்தார்கள். இவர்களுக்கு ஆகாஷ் ஜோசப் (13), அஜய்ஸ் ஜோசப் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 8–ம் வகுப்பும், இளைய மகன் 5–ம் வகுப்பும் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர்.

அசோகன் அபுதாபியில் துணி தைக்கும் தொழிலாளியாக கடந்த 30 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். வெளிநாட்டில் இருந்து கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் வெளிநாடு செல்ல இருந்த நேரத்தில் ஒகி புயல் வீசியது. இதில் அசோகனுக்கு சொந்தமான ரப்பர் மரங்கள் பல முறிந்து சேதம் அடைந்தன.

இதன் காரணமாகவும், தன்னுடைய மகனுக்கு வருகிற 1–ந் தேதி, முதல் திருவிருந்து பெறும் நிகழ்ச்சி வைத்திருந்ததாலும் அசோகன் வெளிநாடு செல்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.


இந்தநிலையில், முதல் திருவிருந்து நிகழ்ச்சி முடிந்ததும் வெளிநாட்டு வேலைக்கு செல்ல நாகர்கோவிலில் உள்ள ஒரு ஏஜென்சி நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்து வந்தார். அந்த நிறுவனத்தினர் அசோகனுக்கு விசா தயாராகிவிட்டதாக நேற்று முன்தினம் தகவல் கொடுத்தனர்.

எனவே வெளிநாடு செல்வதற்கு விமான பயண டிக்கெட் உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும், நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள உறவினர்களுக்கு, மகனின் முதல் திருவிருந்து நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுப்பதற்காகவும் நேற்று அசோகனும், அவருடைய மனைவி விஜி சகாயாவும் மோட்டார் சைக்கிளில் பேச்சிப்பாறையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.

நேற்று மதியம் அவர்கள் பார்வதிபுரத்தை அடுத்த கட்டையன்விளை மின்வாரிய அலுவலகம் முன்பாக வந்தபோது, அதே வழியாக மார்த்தாண்டத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அசோகன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த அசோகன் சாலையோரமாக தூக்கி வீசப்பட்டார். அவருக்கு பின்னால் இருந்த விஜி சகாயா சாலையில் தூக்கி வீசப்பட்டு அரசு பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கினார். இதில் விஜி சகாயா தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சாலையோரமாக தூக்கி வீசப்பட்ட அசோகன் சுதாரித்து எழுவதற்குள் அவரது கண் முன்னாலேயே இந்த துயர சம்பவம் நிகழ்ந்து முடிந்துவிட்டது. அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். மனைவியின் உடலை பார்த்து அவர் கதறியது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த நாகர்கோவிலில் உள்ள உறவினர்களும் விஜி சகாயாவின் உடலைப்பார்த்து கதறி அழுதனர்.

ஏற்கனவே பார்வதிபுரத்தில் நடைபெறும் மேம்பால பணியால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகமானது. இதனால் அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டது.

பின்னர் விஜி சகாயா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் மீது மோதிய பஸ்சின் டிரைவர் காஞ்சரக்கோடு கண்ணன்விளையைச் சேர்ந்த ரூபனை (44) கைது செய்தனர்.

விபத்து நடந்ததும் அந்த பஸ் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதில் வந்த பயணிகள் வேறு பஸ்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்