வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள்

இந்தியாவில் பற்றி எரிந்துகொண்டு இருந்த விடுதலை தீயை அணைக்க ஆங்கிலேய அரசாங்கத்தால் இயற்றப்பட்டதுதான் ரவுளட் சட்டம்.

Update: 2018-04-12 05:26 GMT
ஊடகங்களை கட்டுப்படுத்தவும், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யவும், விசாரணையின்றி சிறையில் அடைக்கவும் அந்த சட்டம் அனுமதித்தது. இதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பலர் கொல்லப்பட்டனர்.

இதை கண்டித்து 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற பூங்காவில் பொதுக்கூட்டம் நடந்தது. பூங்காவின் நாலாபுறமும் உயர்ந்த மதில்கள். உள்ளே செல்லவும், வெளியே வரவும் ஒரு குறுகலான வழி மட்டுமே உண்டு. அந்த பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ராணுவ ஜெனரல் டயர் தலைமையிலான வெள்ளைக்கார சிப்பாய்கள் அங்கு வந்தனர். முன்னெச்சரிக்கை எதுவும் தராமல் கூட்டத்தினரை நோக்கி சுடத்தொடங்கினர். 10 நிமிடம் குண்டு மழை பொழிந்தது.

இருந்த ஒரு வாயிலை நோக்கி தப்பிக்க மக்கள் கூட்டம் முண்டியடித்தது. சுவர்களின் மீது ஏரி குதித்து பலர் மடிந்தனர். உயிர் பிழைக்க முயன்று பூங்காவின் நடுவில் இருந்த கிணற்றில் குதித்த சுமார் 120 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் துப்பாக்கி குண்டுக்கு இரையானார்கள். அன்று இரவு ஊரடங்குச்சட்டம் அமலில் இருந்ததால் வெளியே வரமுடியாமல் அங்கேயே முடங்கி இறந்தனர். மொத்தம் 379 பேர் இறந்ததாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. காந்தியடிகளால் அமைக்கப்பட்ட குழு 1000-க்கும் அதிகமானோர் இறந்ததாக அறிவித்தது.

ஜெனரல் டயர் தனது மேல் அதிகாரிக்கு சமர்ப்பித்த வாக்குமூலத்தில், ‘மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெரும் தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டேனோ அதன்படி அத்தனை வேகத்தில் அவர்கள் மீது தீவிரமாக சுடவில்லை என்று தான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாக படை ஆட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோர் எண்ணிக்கை கூடுதலாக இருந்திருக்கும். ஆகவே அவசியத்திற்கு மேல் தீவிரம் காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பழிக்குப் பழி தீர்க்கும் வகையில் வீரன் உத்தம்சிங் பல ஆண்டுகாலம் விரதம் பூண்டு லண்டன் கேக்ஸ்டன் மண்டபத்தில் 1927-ம் ஆண்டு ஜெனரல் டயரை சுட்டுக்கொன்றார். நாளை (ஏப்ரல் 13-ந்தேதி) ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த தினம்.

- எழுத்தாளர் எம்.குமார்

மேலும் செய்திகள்