ரெயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 535 பேர் கைது
ரெயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 535 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து பா.ம.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
மணவாளநகர், வெங்கத்தூர், பட்டரை, ஒண்டிக்குப்பம், கணேசபுரம், குமரன்நகர், கண்ணையாநகர், கே.கே.நகர் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து மணவாளநகர் சந்திப்பு பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரெயில் மறியல்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வ.பாலா என்கிற பாலயோகி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு துணை செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் பூபதி, நகர செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர்கள் விஜயராகவன், வாசுதேவன், சுரேஷ், ரமேஷ், ஒன்றிய செயலாளர் கேசவன் உள்பட திரளான பா.ம.க. வினர் கலந்து கொண்டு கண்டன கோஷங் களை எழுப்பினார்கள்.
அப்போது அவர்கள் பேரணியாக திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
355 பேர் கைது
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 355 பேரை கைது செய்து அங்கு உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போலீஸ் வாகனத்தில் சென்ற பா.ம.க.வினர் மணவாளநகர் சந்திப்பு பகுதியில் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து சென்றனர்.
இதனால் அந்த வழித்தடத்தில் ¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.