திருக்கண்டலம் தடுப்பணையை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திருக்கண்டலம் தடுப்பணையை உடனடியாக சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சியில் ரூ.33 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. இந்த தடுப்பணையை உடனடியாக சீரமைத்து கட்டி முடிக்கவேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தாமரைபாக்கம் கூட்டுச்சாலையில் நேற்று முன்தினம் மாலை பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்துக்கு எல்லாபுரம் ஒன்றிய தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தேவதாஸ், பிரகாஷ், ஏ.கே.மூர்த்தி, சுரேஷ், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எம்.பாஸ்கர், மாவட்ட நிர்வாகிகள் புருஷோத்தமன், ராஜா, அரிகிருஷ்ணன், முத்துவேல், எழிலரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் ஒன்றிய பொதுசெயலாளர் பாபு நன்றி கூறினார்.