காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னையில், தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் 100-க்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் எம்.எம்.ஆர்.மதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதனைத்தொடர்ந்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப் தலைமையிலும், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தரப்பில் வி.எம்.எஸ்.முஸ்தபா தலைமையிலும் அந்தந்த அமைப்புகள் சார்பில் தனித்தனியே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டங்களால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.