திருவொற்றியூரில் சிறுமியை கடத்திய வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி

திருவொற்றியூரில், வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை சாக்லெட் கொடுத்து கடத்திச்சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

Update: 2018-04-11 22:42 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் தாங்கல் பீர்பயில்வான் தர்கா ரோடு பகுதியை சேர்ந்தவர் நூர்முகமது. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மும்தாஜ். இவர்களுடைய மகள் ரக்‌ஷனா (வயது 4). இவள், அங்குள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள்.

நேற்று மாலை வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த ரக்‌ஷனா, திடீரென மாயமானாள். அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர், அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் இதுபற்றி திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தனர்.

பொதுமக்கள் தர்மஅடி

இதற்கிடையில் தாங்கல் கடற்கரையோரம் குடிபோதையில் வாலிபர் ஒருவர் சிறுமியுடன் இருப்பதையும், அந்த சிறுமி அழுது கொண்டே இருந்ததையும் கண்டு சந்தேகம் அடைந்த பொதுமக்கள், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அவள், அந்த வாலிபர் சாக்லெட் வாங்கி கொடுத்து தன்னை அழைத்து வந்ததாக கூறினாள்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அதற்குள் அங்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து வாலிபரை மீட்டு விசாரித்தனர். அதில் அவர், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பிரியாணி மாஸ்டர் ஆரோன் (24) என்பது தெரிந்தது.

கைது

ஆரோன், முதலில் திருவொற்றியூர் தாங்கல் பகுதியில்தான் வசித்து வந்தார். அதன்பிறகுதான் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டார். நேற்று வேலை விஷயமாக தாங்கல் பகுதிக்கு வந்த அவர், வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ரக்‌ஷனாவை சாக்லெட் கொடுத்து கடத்தி வந்தது தெரிந்தது.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்தியதாக ஆரோனை கைது செய்தனர். மேலும் இன்னும் திருமணம் ஆகாத அவர் எதற்காக சிறுமியை கடத்தினார்?, சிறுமியை கடத்தி விற்க முயன்றாரா? அல்லது குடிபோதையில் இருந்த அவர், தவறான நோக்கத்துக்காக சிறுமியை கடத்தினாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்