விதிமுறை மீறல்: நுங்கம்பாக்கத்தில், பிரியாணி கடைக்கு ‘சீல்’ பெருநகர வளர்ச்சிக்குழுமம் நடவடிக்கை

சென்னை நுங்கம்பாக்கத்தில், விதிமுறை மீறி கட்டப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2018-04-11 22:41 GMT
சென்னை, ஏப்.12-

சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை நுங்கம்பாக்கம் மூர்ஸ் சாலை மற்றும் கல்லூரி சாலை சந்திப்பில் பிரபல கட்டுமான நிறுவனம் சார்பில் அலுவலக மற்றும் வணிக ரீதியான பயன்பாட்டுக்காக கீழ் தளம், தரை தளம், இடையே ஒரு மாடி அதன் மேலே 3 அடுக்கு மாடிகள் கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் ஒப்புதல் கோரப்பட்டது. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் பிரபல பிரியாணி கடையும், 2 கடைகளும் செயல்பட்டு வந்தன. பிரியாணி கடையின் பின்புறம் விதிமுறையை மீறி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல தரை தளத்தில் செயல் பட்ட 2 கடைகளும் கட்டுமான விதிமுறைகளை மீறியுள்ளன. மேலும் அந்த கட்டிடத்தின் மாடியில் விதிமுறையை மீறி ஒரு அறையும் கட்டப்பட்டுள்ளது. இந்த விதிமுறை மீறல்கள் குறித்து, கட்டிடத்தின் உரிமையாளருக்கு கடை பூட்டி, சீல் வைக்கப்படும் அல்லது இடித்து தள்ளப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் கட்டிட உரிமையாளர் அந்த நோட்டீசை கருத்தில் கொள்ளவில்லை. இதையடுத்து 11-ந் தேதி (நேற்று) காலை 8.30 மணிக்கு விதிமுறை மீறி கட்டப்பட்ட பிரியாணி கடை உள்பட தரை தளத்தில் செயல்பட்ட 3 கடைகளையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்