தாதரில், பொதுப்பணித்துறை என்ஜினீயரின் இருக்கையை நவநிர்மாண் சேனாவினர் தூக்கிச்சென்றதால் பரபரப்பு
தாதரில், பொதுப்பணித்துறை என்ஜினீயரின் இருக்கையை நவநிர்மாண் சேனாவினர் தூக்கிச்சென்றதால் பரபரப்பு உண்டானது.
மும்பை,
தாதரில், பொதுப்பணித்துறை என்ஜினீயரின் இருக்கையை நவநிர்மாண் சேனாவினர் தூக்கிச்சென்றதால் பரபரப்பு உண்டானது.
சிவாஜி சிலை புதுப்பிக்கும் பணி
மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை உள்ளது. இந்த சிலையை புதுப்பிக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சிவாஜி சிலையை புதுப்பிக்கும் பணிக்கு ஒதுக்கப்பட்டு உள்ள இந்த தொகை மிகவும் அதிகமானது என நவநிர்மாண் சேனா கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து கேட்பதற்காக அக்கட்சியின் முன்னாள் கவுன்சிலர் சந்தீப் பாண்டே பலமுறை தாதரில் உள்ள பொதுப்பணித்துறை என்ஜினீயர் சுதாகர் சாங் கலேயின் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார்.
இருக்கையை தூக்கினர்
ஆனால் அவர் சென்ற நேரத்தில் எல்லாம் என்ஜினீயர் அங்கு இல்லை என ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தநிலையில், நேற்று அவரது தலைமையில் அங்கு வந்த நவநிர்மாண் சேனாவினர் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போதும் என்ஜினீயர் சுதாகர் சாங்கலே அங்கு இல்லை.
இதையடுத்து திடீரென நவநிர்மாண் சேனாவினர் அவரது இருக்கையை வெளியே தூக்கிக்கொண்டு வந்தனர். இதை பார்த்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பரபரப்பு
அவர்களிடம், இருக்கை சிவாஜி பார்க்கில் உள்ள சிவாஜி சிலை அருகே வைக்கப்படும். அங்கு வந்து தங்களை பார்த்து பேசிவிட்டு இருக்கையை எடுத்துச்செல்ல சுதாகர் சாங்கலேயிடம் கூறும்படி சொல்லிவிட்டு நவநிர்மாண் சேனாவினர் இருக்கையை சிவாஜி பார்க்கிற்கு தூக்கி வந்து வைத்தனர்.
நவநிர்மாண் சேனாவினர் பொதுப்பணித்துறை என்ஜினீயரின் இருக்கையை தூக்கி வந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.