பெரியகுளம் மத பாடசாலையில் இளம்பெண்களை கொடுமைப்படுத்திய 2 பேர் கைது: 3 பேருக்கு வலைவீச்சு

பெரியகுளம் மத பாடசாலையில் இளம்பெண்களை கொடுமைப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-04-11 22:16 GMT
தேனி,

பெரியகுளம் தென்கரை பாரதி நகரில் ஒரு மத பாடசாலை செயல்படுகிறது. இங்கு தங்கியிருந்து படித்து வந்த 2 இளம்பெண்கள் நேற்று முன்தினம் பாடசாலையில் இருந்து வெளியேறினர். தங்களை அங்கு கொடுமைப்படுத்துவதாக கூறி அவர்கள் பெரியகுளம் அருகில் உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் தஞ்சம் அடைந்தனர். இதற்கிடையே அவர்களை அழைத்துச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து தென்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் பெரியகுளம் பாரதிநகரை சேர்ந்த அப்துல்காதர் (வயது 39), இ.புதுக்கோட்டையை சேர்ந்த காதர் மீரான் மைதீன் (28) என்பதும், அவர்கள் அதே மத பாடசாலையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், பாடசாலையில் தங்களை கொடுமைப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை வழக்குப்பதிவு செய்து அப்துல்காதர், காதர்மீரான் மைதீன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து மத பாடசாலையை சேர்ந்த ரியாஸ் அகமது, ரம்ராஜ், சதாம்உசேன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்