பெருந்துறையில் தூக்குப்போட்டு ஆசிரியர் தற்கொலை
பெருந்துறையில் தூக்குப்போட்டு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை,
பெருந்துறை பவானி சாலையில் உள்ள ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 47). உடற்கல்வி ஆசிரியர். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் லூர்துசாமிக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் லூர்துசாமி வீட்டின் விட்டத்தில் உள்ள மின்விசிறியின் கொக்கியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, லூர்துசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.