போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிய பிரபல சங்கிலி பறிப்பு கொள்ளையனை போலீசார் சுட்டு பிடித்தனர்

பெங்களூருவில், போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிய பிரபல சங்கிலி பறிப்பு கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-04-11 21:30 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில், போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பிய பிரபல சங்கிலி பறிப்பு கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

3 பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

பெங்களூரு எலகங்கா, பாகலூர், சிக்கஜாலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 3 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றிருந்தார்கள். இதுதொடர்பாக எலகங்கா, பாகலூர், சிக்கஜாலா போலீஸ் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே நேரத்தில் தங்கச்சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க அனைத்து போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ்காரர்கள் இமாம்ஷாப் மற்றும் பீராதார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது பஞ்சாப் மாநில பதிவு எண்ணுடன் வந்த மோட்டார் சைக்கிளை போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்த முயன்றார்கள். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் ஓட்டி சென்றார்கள். உடனே அவர்களை பின்தொடர்ந்து போலீஸ்காரர்கள் வாகனத்தில் சென்றனர்.

போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்

பின்னர் சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளை, போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 மர்மநபர்கள் போலீஸ்காரர்கள் இமாம்ஷாப், பீராதாரை கத்தி, நீண்ட வாளால் தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்கள். இதில், 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இமாம்ஷாப் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராதோர் உத்தரவின் பேரில் யஷ்வந்தபுரம் உதவி போலீஸ் கமிஷனர் ரவி பிரசாத் தலைமையில் மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் 2 மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். அதே நேரத்தில் மர்மநபர்கள் 2 பேரும் சோழதேவனஹள்ளி அருகே உள்ள தைலமர தோட்டத்தில் பதுங்கி இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் சோழதேவனஹள்ளி அருகே ஷெட்டிஹள்ளி வனப்பகுதியில் நின்ற போலீஸ்காரர் இமாம்ஷாப்பை பார்த்ததும் ஒரு மர்மநபர் அங்கிருந்து ஓடினார்.

துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்

இதை பார்த்த இமாம்ஷாப், அருகில் நின்ற நந்தினி லே-அவுட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசேகரிடம் தெரிவித்தார். உடனே அந்த மர்மநபரை பிடிக்க சோமசேகரும், இமாம்ஷாப்பும் முயன்றனர். உடனே அந்த மர்மநபர் தன்னிடம் இருந்த கத்தியால் சோமசேகரை தாக்க முயன்றார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் சோமசேகர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் 2 ரவுண்டு, மர்மநபரை நோக்கி சுட்டார். இதில், மர்மநபரின் வலது கை, வலது காலில் குண்டுகள் துளைத்தன. இதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

பின்னர் மர்மநபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தார்கள். உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மர்மநபர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல, காயம் அடைந்த போலீஸ்காரர்கள் இமாம்ஷாப், பீராதாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

‘பவாரியா‘ கும்பலை சேர்ந்தவர்

முன்னதாக இதுபற்றி அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராதோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது பிடிபட்டவரின் பெயர் ராம்சிங்(வயது 35) என்பதும், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் பிரபல சங்கிலி பறிப்பு கொள்ளையர்களான ‘பவாரியா‘ கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. ராம்சிங், மற்றொருவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறிப்பதை தொழிலாக வைத்திருந்தனர்.

ராம்சிங் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் நகரில் நடந்திருந்த 9 சங்கிலி பறிப்பு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து ஒரு தங்கசங்கிலி, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய ராம்சிங்கின் கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். சங்கிலி பறிப்பு கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்