பா.ம.க. முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பா.ம.க. முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி சேலத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2018-04-11 23:00 GMT
சேலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் பா.ம.க.சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் புறநகர் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சேலம் மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி, முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், திருச்சி மெயின்ரோடு, செவ்வாய்பேட்டை, லீ பஜார், சத்திரம், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, சிவதாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறிப்பட்ட சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சூரமங்கலம், சிவதாபுரம், பனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம்போல் கடைகளை திறந்திருந்த கடைக்காரர்களை பா.ம.க.நிர்வாகிகள் சந்தித்து காவிரி நீர் பிரச்சினைக்காக ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டனர். சேலத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால் சேலம் பழைய பஸ்நிலையத்தில் மிகவும் குறைவான பயணிகளே காணப்பட்டனர். மேச்சேரி, ஓமலூர், மேட்டூரில் இருந்து சேலத்திற்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதேசமயம், வழக்கம்போல் சேலம் மாவட்டத்தில் அரசு பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்டன.

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வழியாக ஜங்ஷன் சென்ற அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ஜங்ஷன் ரெயில் நிலையம், டவுன் ரெயில் நிலையம், புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்