காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்: மாவட்டத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் நேற்று பா.ம.க.வினர் முழு அடைப்பு போராட்டத்தின்போது ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

Update: 2018-04-11 23:00 GMT
சேலம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி போராட்டம் நடைபெற்றது.

மேட்டூரில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. கிராமத்து பகுதிகளில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டன. முழு அடைப்பு காரணமாக மேட்டூர் பஸ்நிலையம், சதுரங்காடி, உழவர்சந்தை, உள்பட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. துணை சூப்பிரண்டு சவுந்தரராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தையொட்டி மேட்டூர் பூங்கா அருகே பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணையன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் துரைராஜ், சேலம் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷம்எழுப்பினர். முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்று பேசினார். நகர செயலாளர்கள் சுகுமார், சந்திரசேகரன், நகர தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தர மத்திய அரசிற்கு மனமில்லை. தமிழக மக்கள் அரசியல் கட்சிகளை மறந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இருமாநிலங்களுக்கு இடையேயான சகோதரத்துவம் சீர்குலைந்து விடும். மாநில அரசு மத்திய அரசுக்கு பயந்து நடக்கிறது. தமிழக மக்களை காப்பாற்றும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஓமலூரில் முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி பா.ம.க.வினர் வீதிவீதியாக சென்று கடைகளை அடைக்க கேட்டுக்கொண்டனர். ஓமலூர் பஸ்நிலையத்தில் உள்ள ஒரு மளிகை கடையை அடைக்க அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது கடையில் இருந்த துவரம் பருப்பு மற்றும் பொருட்கள் சூறையாடப்பட்டன. கடை உரிமையாளர் முகமது மகீமை தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து பா.ம.க. வினர் ஊர்வலமாக சென்று பஸ்நிலையம் அண்ணா சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட தேர்தல் பணிகுழுத்தலைவர் சதாசிவம், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி, மாவட்ட துணை தலைவர் சரவணன், துணை செயலாளர் பழனிசாமி உள்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ஓமலூரில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அயோத்தியாபட்டணம், வாழப்பாடி, பகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைபொது செயலாளர் குணசேகரன் தலைமையில் வாழப்பாடி பஸ்நிலையத்தில் அரசு பஸ் முன்பு மத்திய அரசினை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஜலகண்டாபுரம் பஸ்நிலையம், கடைவீதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சூரப்பள்ளி, ஆவடத்துார், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் தேங்காய் மண்டிகள் மூடி கிடந்தன. தனியார் பஸ் போக்குவரத்து இயக்கப்படவில்லை. ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயங்கின. ஜலகண்டாபுரம் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள். மருந்து கடைகள், ஜவுளிக்கடைகள், தறிக்கூடங்கள், ஜவுளி சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், ஜவுளிதொழில் கூடங்கள் அடைக்கப்பட்டன. இதனால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இடங்கணசாலை பஸ் நிலைய கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்நிலையத்திலும் பயணிகள் இல்லாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. தனியார் பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே ஓடின. இதேபோல மகுடஞ்சாவடி, காக்காபாளையம், வேம்படிதாளம், பெருமாகவுண்டம்பட்டி, சின்னப்பம்பட்டி, எட்டிகுட்டைமேடு ஆகிய இடங்களில் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் இந்த பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் உள்ள முக்கிய கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், சுவீட் ஸ்டால்கள், ஜவுளி கடைகள், நகை கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மதியம் 2 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

ஆத்தூர் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் ஆத்தூர் ரெயில் நிலையத்தில் உழவர் பேரியக்க மாநில துணைத்தலைவர் பாலசுந்தரம் தலைமையில் மாநில பா.ம.க. துணை செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் நடராஜன், உட்பட 200-க்கும் மேற்பட்டோர் சேலத்தில் இருந்து ஆத்தூர் வழியாக விருத்தாசலம் சென்ற ரெயிலை மறியல் செய்ய ஊர்வலமாக வந்தனர். தண்டவாளத்தில் இறங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் கூடுதல் சூப்பிரெண்டு சுரேஷ்குமார், துணை சூப்பிரண்டுகள் பொன்.கார்த்திக்குமார், ராஜூ, இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் தலைமையில் இருந்த போலீசார் விரைந்து சென்று ரெயிலை மறிக்க முயன்ற 214 பேரை கைது செய்து பஸ்களில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

சங்ககிரியில் அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன. பஸ்கள், லாரிகள் வழக்கம் போல் ஓடின. மருந்து கடைகள்மட்டும் திறந்து இருந்தன. மாலை 4 மணியளவில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியது.

தேவூரில் பா.ம.க. சேலம் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் லட்சுமணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பேனர், கொடி ஏந்தியவாறு கோஷமிட்டு தேவூரில் இருந்து சந்தைப்பேட்டை, மேட்டுக்கடை வழியாக ஊர்வலமாக வந்தனர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

தலைவாசல் வடக்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் சங்கர் தலைமையில் பா.ம.க.வினர் தலைவாசல் பஸ் நிலையம், மும்முடி, வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கடைகளுக்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு நோட்டீஸ் வினியோகம் செய்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன. தலைவாசல் காய்கறி மார்க்கெட்டிலும் கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் ஊனத்தூர், புத்தூர், வீரகனூர், புளியங்குறிச்சி, ஆறகளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். 

மேலும் செய்திகள்