காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பா.ம.க.வினர் சாலை மறியல் 310 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வேலூர் மாவட்டம் முழுவதும் நடந்த சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரிகள் உள்பட 310 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-11 23:00 GMT
வேலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்துவதாக பா.ம.க. அறிவித்து இருந்தது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி வேலூரில் பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்கவில்லை. அதேபோல் தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பஸ்களை இயக்கவில்லை. அதனால் 80 சதவீத தனியார் பஸ்கள் இயங்கவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட குறைவாக இருந்தது. வேலூர் நேதாஜி மார்க்கெட், சாரதிமாளிகை, காட்பாடி சாலை, ஆற்காடு சாலை, அண்ணாசாலை, மண்டித்தெரு உள்பட வேலூர் மாநகரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பா.ம.க.வை சேர்ந்த வியாபாரிகள் கடையடைப்புக்கு ஆதரவாக தங்கள் கடைகளை அடைத்தனர்.

வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் இளவழகன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம் தலைமையில் பா.ம.க.வினர் கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், லோகநாதன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை பஸ், வேன்களில் ஏற்றி வேலப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வேலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் இருந்து பா.ம.க. மற்றும் காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கிருஷ்ணகிரி ரோடு வழியாக ஊர்வலமாக தலைமை தபால் நிலையம் வந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொது செயலாளர் டி.கே.ராஜா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஜி.பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் நிர்மலா ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆர்.கிருபாகரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிவா, தலைமை கழக பேச்சாளர் கனகராஜ், நகர செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூரில், வாணியம்பாடி - கிருஷ்ணகிரி மெயின் ரோடு, ஜின்னா ரோடு, பெரியகடை தெரு, சின்னகடை தெரு, புதுப்பேட்டை ரோடு, அவுசிங்போர்டு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் இயங்கின.

ஜோலார்பேட்டையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

ஆம்பூரில் பா.ம.க. இளைஞர் அணி சார்பில், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள்டெக்கர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேலூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோளிங்கர் தபால் அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில சட்டப் பாதுகாப்பு துணை செயலாளர் சக்கரவர்த்தி, மாநில இளைஞர் அணி செயலாளர் தீனதயாளன், மாநில பேச்சாளர் தம்பி ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப்பொது செயலாளர் கே.சரவணன் கலந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சோளிங்கர் நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 130 பேரை, சோளிங்கர் போலீசார் கைது செய்தனர்.

சோளிங்கரில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு பஸ்கள் இயங்கியது. தனியார் பஸ்கள் ஓடவில்லை.

அணைக்கட்டு பஜாரில் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய தலைவர் குப்புசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் பா.ம.க.வினர் மத்திய, மாநில அரசை கண்டித்து கடையடைப்பு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட 100 பேரை, போலீசார் கைது செய்தனர்.

மேலும் அணைக்கட்டில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

வேலூர் மாவட்டத்தில் 2 முன்னாள் மத்திய மந்திரிகள் உள்பட 310 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்