திருப்பூரில் கார் திருடிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் காரை திருடிய வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-11 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. பனியன் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி காலை, தனது காரை இந்திரா நகரில் உள்ள பனியன் நிறுவன கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மதியம் வந்து பார்த்தபோது காரை காணவில்லை. சாவி காருக்குள் இருந்ததால் மர்ம ஆசாமிகள் காரை திருடிச்சென்றது தெரியவந்தது. காரின் மதிப்பு ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் கயல்விழி மேற்பார்வையில் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கார் திருடிய ஆசாமிகளை தேடி வந்த னர். மேலும் பழனிச்சாமியின் அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பழனிச்சாமியின் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்த தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ராஜதுரை(வயது 26) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் அங்கேயே வேலை செய்து வந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது தனது தம்பி அஸ்வின் ராஜா(21), நண்பரான திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை சேர்ந்த ராஜமூர்த்தி(28) ஆகியோர் சேர்ந்து காரை திருடியது தெரியவந்தது. சம்பவத்தன்று ராஜதுரை தகவல் கொடுத்ததும், அஸ்வின்ராஜா, ராஜமூர்த்தி ஆகியோர் அலுவலக வளாகத்தில் புகுந்து காரை எடுத்துச்சென்றுள்ளனர்.

பின்னர் அந்த காரை கோவை மாவட்டம் சோமனூரில் ஓரிடத்தில் மறைத்து நிறுத்தி வைத்திருந்துள்ளனர். ஆனால் ராஜதுரை எதுவும் தெரியாதவர் போல் பனியன் நிறுவனத்திலேயே பணியாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ராஜதுரை, அஸ்வின்ராஜா, ராஜமூர்த்தி ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர். பணத்தேவைக்காக காரை திருடியதாக 3 பேரும் தெரிவித்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்