காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரெயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 300 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கும்பகோணத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தாராசுரம் மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2018-04-11 23:00 GMT
கும்பகோணம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், ரெயில் மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் பஸ், ரெயில் மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க.வினர் நேற்று காலை கும்பகோணம் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். முன்னதாக காமராஜர் சாலையிலிருந்து ஊர்வலமாக வந்த அவர்கள் ரெயில் நிலையத்தின் உள்ளே சென்று திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் ரெயில் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் மறியல் போராட்டத்துக்கு பா.ம.க மாநில துணை பொது செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு பேரியக்க துணை செயலாளர் ஜோதிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரெயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர். ரெயில் மறியல் போராட்டத்தால் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்தநிலையில் பா.ம.க.வினர் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் வெளியூர்களில் இருந்து தாராசுரத்துக்கு காய்கறி வாங்க வந்திருந்த சில்லரை வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

மேலும் செய்திகள்