அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2-வது நாளாக போராட்டம்: மாணவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு-வாக்குவாதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.;

Update: 2018-04-11 22:30 GMT
சிதம்பரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுவடைந்து வருகிறது. தினசரி பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்றும் 2-வது நாளாக மாணவர் களின் போராட்டம் நீடித்தது. இதில் பொறியியல் துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு ஒன்று திரண்ட அவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் மாணவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மதியம் 12 மணி வரையில் இந்த போராட்டம் நடந்தது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் மாலை 3 மணிக்கு அறிவியல் மற்றும் கலை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ராஜாமுத்தையா நூற்றாண்டு பிறந்தநாள் நினைவு நுழைவு வாயில் முன்பு சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களை கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதையடுத்து வேறு வழியின்றி மாணவர்களை வலுகட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் இறங்கினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போலீசாருடன் மாணவர்கள், சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 5 மாணவர்களை அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் பிடித்து சென்றனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மாணவர்கள் எங்களது உரிமைக்காகதான் போராடுகிறோம், எப்படி எங்களை அப்புறப்படுத்தலாம், நீங்கள் பிடித்து சென்ற 5 மாணவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறி நுழைவுவாயிலின் குறுக்கே அமர்ந்து போராட்டம் செய்தனர். நிலமை மோசமானதால், பிடித்து செல்லப்பட்ட 5 மாணவர்களையும் போலீசார் தங்களது வாகனத்தில் கொண்டு வந்து அங்கு இறக்கி விட்டனர்.

இதையடுத்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம் தாலுகா அம்பேத்கர், அண்ணாமலை நகர் ஆண்டவர் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமாதானமடைந்த மாணவ, மாணவிகள் அங்கிருந்து 5 மணிக்கு கலைந்து சென்றனர்.

பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் போலீசாரும் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்