விக்கிரமசிங்கபுரத்தில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருட்டு; 3 பெண்கள் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடியதாக 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-11 20:45 GMT
விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரத்தில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடியதாக 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

பணம் திருட்டு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் ஜார்ஜ்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராபேல் மனைவி அய்யம்மாள் (வயது 38). இவர் நேற்று முன்தினம் மதியம் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலைய பஸ்நிறுத்தத்தில் நின்று மினிபஸ்சில் ஏறியுள்ளார். அப்போது பஸ்சில் பர்தா அணிந்திருந்த பெண் ஒருவர் தனக்கு அருகில் உட்கார அய்யம்மாளுக்கு இடம் கொடுத்துள்ளார். சில நிமிடங்களில் அய்யம்மாள் கூடையில் வைத்திருந்த மணிபர்சை பர்தா அணிந்திருந்த பெண் நைசாக திருடிவிட்டார்.

தன்னுடைய மணிபர்ஸ் அந்த பெண்ணின் கையில் இருப்பதை பார்த்த அய்யம்மாள், இது என்னுடைய பர்ஸ். உன் கைக்கு எப்படி வந்தது என்று கேட்டுள்ளார். அவரிடம் இருந்து பர்சை வாங்கி பார்த்தபோது அதில் இருந்த ஆயிரம் ரூபாயை காணவில்லை. இதையடுத்து அந்த பெண்ணையும், அவருடன் பர்தா அணிந்து வந்திருந்த மேலும் 2 பெண்களையும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு ராஜகோபால் நகரை சேர்ந்த ஆனந்த் மனைவி பூங்கொடி (38), மருதுபாண்டி மனைவி மீனா (26), மணி மனைவி நாகவள்ளி (27) என்பதும், இவர்கள் 3 பேரும் கூட்டாக சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்