காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் பேச்சு

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும் என திருவாரூரில் நடந்த காவிரி உரிமை மீட்பு பயணத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2018-04-11 02:22 GMT
திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

நான்காவது நாளாக நேற்று காலை 8.40 மணிக்கு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் நடை பயணத்தை தொடங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.

தேவர்கண்டநல்லூர் பெத்தார்ணசாமி கோவில் வளாகத்தில் நடந்த விவசாயிகள் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காவிரி நீர் பிரச்சினை என்பது இன்று, நேற்று அல்ல, பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நிறைவேற்றிட மத்திய அரசு முன்வரவில்லை. தமிழகத்தை ஆளுகின்ற அ.தி.மு.க. அரசு, மத்திய அரசை வலியுறுத்த தவறி விட்டது. இதனால் போராட்ட களங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாக்கப்பட்டுள்ளோம். கடந்த 7-ந் தேதி காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருச்சி மாவட்டத்தில் தொடங்கி தஞ்சை வழியாக வந்து 4-வது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

காவிரி நீர் வாழ்வாதார பிரச்சினையாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கட்சி பாகுபாடு பார்க்காமல் அரசியலை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர். பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்டு என்ற பழமொழிக்கேற்ப நான் அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் காட்டுவதை விரும்புகிறேன். காவிரி நீர் பிரச்சினை குறித்து முழுமையாக அறிந்து தெரிந்தவர் தலைவர் கருணாநிதி தான்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல் அரியலூரில் இருந்து மற்றொரு பயணமும் தொடங்கியுள்ளது. இந்த இரு பயணக்குழுவும் வருகிற 12-ந் தேதி கடலூரில் சங்கமிக்கின்றோம். அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனை தொடர்ந்து 13-ந் தேதி அங்கிருந்து பேரணியாக புறபட்டு சென்னை செல்கிறோம். சென்னை ராஜ்பவனில் கவர்னரை நேரில் சந்திக்க உள்ளோம். இதற்காக காலை 12.30 மணிக்கு கவர்னர் நேரம் தந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

அப்போது காவிரி நீர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கான காரணம் குறித்து எடுத்து சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்திட உள்ளோம்.

தற்போது சுப்ரீம் கோர்ட்்டு, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில் மே மாதம் 3-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் உரிய பதிலை தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. எனவே நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின், திருவாரூரில்குளிக்கரை பகுதியில் மாட்டுவண்டி ஓட்டி வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்