பெரம்பலூரில் தொடங்கிய ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் குவிந்தனர்

பெரம்பலூரில் தொடங்கிய ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் குவிந்தனர். அவர்கள் உடல்தகுதி தேர்வில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Update: 2018-04-11 02:22 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் பெரம்பலூர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் நேற்று நடந்தது.

இந்த முகாம் மூலமாக ராணுவத்தில் பல்வேறு பரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக விளையாட்டரங்கின் நுழைவுவாயில் அருகே இளைஞர்களை பகுதி வாரியாக பிரித்து உள்ளே அனுப்புவதற்கு வசதியாக தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வெளிநபர்கள் யாரும் விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஆள்மாறாட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு ஆங்காங்கே ராணுவ படைவீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க வெளிமாவட்ட இளைஞர்கள் பலர் பெரம்பலூரில் குவிந்தனர். முதலில் முகாம் நுழைவுக்கூட சீட்டின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, ராணுவ பணிக்கான தேர்வுக்குழுவினர் இளைஞர்களை உள்ளே அனுப்பினர். முதல் நாள் ஆட்கள் தேர்வில் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களை பகுதி, பகுதியாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் 250 இளைஞர்கள் என தேர்வு நடந்தது. முதல்கட்டமாக உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, பயோ மெட்ரிக் முறையில் அவர்களது கை ரேகைகள், அங்க அடையாளங்களை பதிவு செய்து, உயரம், எடை பதிவு செய்யப்பட்டது. இத்தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்று (புதன்கிழமை) மருத்துவத்தேர்வு நடத்தப்பட உள்ளது. முதல் நாள் தேர்வில் பங்கேற்றவர்களில் சுமார் 160 பேர், மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள இளைஞர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, கட்டண அடிப்படையில் நல்ல உணவு வகைகள், சான்றிதழ்களை குறைந்த கட்டணத்தில் நகலெடுக்கும் வசதி, ஆள்சேர்ப்பு முகாமிற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், தீயணைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆள்சேர்ப்பு முகாமில் மொத்தம் 18,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி விளையாட்டரங்கில் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சி ஆகியவை மேற்கொள்ள அனுமதி கிடையாது. ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்