தூத்துக்குடி அருகே பரபரப்பு: மீன்கள் செத்து கரை ஒதுங்கின

தூத்துக்குடி அருகே மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதற்கு தொழிற்சாலை கழிவுகள் காரணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-04-11 02:22 GMT
ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டு உள்ளது. இங்கு அவ்வப்போது கடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் மீன்கள் கூட்டமாக கரை ஒதுங்குவது, சில நேரங்களில் இறந்து ஒதுங்குவது போன்ற நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

அதே நேரத்தில் கடற்கரையோரங்களில் ஏராளமான தொழிற்சாலைகளும் அமைந்து உள்ளன. இதனாலும் மீன்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலையில் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. அந்த பகுதியில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு மீன்கள் இறந்த நிலையில் கிடந்தன. சிறிய மீன்கள் முதல் சுமார் 2 அடி நீளம் கொண்ட மீன்கள் வரை கரை ஒதுங்கின.

இந்த பகுதியில் அதிக அளவில் காணப்படக்கூடிய ஊளி, கீழி, மூஞ்சான், விளைமீன், ஓரை, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிகமாக இறந்து கிடந்தன. இதனை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீன்கள் திடீரென இறந்ததால் கடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, கடற்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் கடலில் கலந்து இருக்கலாம் என்றும், அதனாலேயே மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதே போல் கடந்த பிப்ரவரி மாதமும் அதே இடத்தில் ஏராளமாக மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மீன்கள் இறந்து கிடந்த பகுதிக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் பாலசரசுவதி கூறுகையில், மீன்கள் இறந்து கிடந்த பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். அப்போது மீன்வள கல்லூரி மூலம் கடல்நீர், மீன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உரிய பரிசோதனைக்கு பிறகுதான் தொழிற்சாலை கழிவுகளால் மீன்கள் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரிய வரும். தொடர்ந்து மீன்கள் இறந்து வருவதால் இந்த பிரச்சினையை நாங்கள் தீவிரமாக கையாண்டு வருகிறோம் என்றார். 

மேலும் செய்திகள்