எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்செந்தூரில் சாலைமறியல்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்செந்தூரில் சாலைமறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 116 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-04-11 02:17 GMT
திருச்செந்தூர்,

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும். இதனை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும். இதற்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 9 உயிர்களை பறித்த பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் இயக்கங்கள் சார்பில், திருச்செந்தூரில் நேற்று காலையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் இருந்து ஏராளமானவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்று, பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ராமர், துணை தலைவர் பொன்ராஜ், பன்னீர்செல்வம், வட்டார செயலாளர் முத்துகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், ஒன்றிய செயலாளர் சங்க தமிழன், ஆதி தமிழர் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட தலைவர் குணேசுவரி, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அமர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 116 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்