நெல்லை கொக்கிரகுளம் ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கு 11 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்படுகின்றன. இவை உறுதியாக நிற்கும் வகையில் வலுவான பாறை இருக்கும் பகுதி வரை மண்ணுக்குள் குழி தோண்டி, தூண்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Update: 2018-04-11 02:09 GMT
நெல்லை,

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுலோச்சன முதலியார் பாலம் கட்டப்பட்டது. பின்னர் பாலம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பழமையான இந்த பாலத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே இந்த பாலத்தின் அருகில் புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இங்கு புதிய பாலம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் மற்றும் அருகில் உள்ள பலாப்பழ ஓடையில் கூடுதல் பாலம் ஆகியவை கட்டுவதற்கு ரூ.18 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 24 அடி அகலமும், 240 மீட்டர் நீளத்திலும் மிகப்பிரமாண்டமான முறையில் பாலம் கட்டப்படுகிறது.

கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் தென்பகுதியில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இதற்கான மண்பரிசோதனை ஏற்கனவே நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் தூண்களை நிறுவதற்கான பள்ளம் தோண்டும் இடங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து குறியீடு செய்து கொடுத்தனர்.

அந்த இடங்களில் எத்தனை அடி ஆழம் வரை குழி தோண்டி கான்கீரீட் தூண்களை அமைப்பது என்பதை உறுதி செய்ய முதற்கட்ட பணி நேற்று தொடங்கியது. அதாவது பாலம் அமைய உள்ள பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் எந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மண்ணுக்குள் எத்தனை அடி ஆழத்தில் வலுவான பாறை அமைந்திருக்கிறது என்பதை தோண்டி பார்த்து உறுதி செய்கின்றனர். இதற்கு குழி தோண்டு்ம் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஆற்றுக்குள் பாலம் கட்டுவது சவாலான விஷயம். இதில் கான்கிரீட் தூண்கள் நிலையாக, உறுதிபெற்று நிற்பதற்காக வலுவான பாறை இருக்கும் பகுதி வரை குழி தோண்டப்படும். சமீபத்தில் கருங்குளம் தாமிரபரணி ஆற்றுக்குள் 70 அடி ஆழம் வரை தோண்டி கான்கிரீட் தூண்களை நிறுவினோம். அதே போல் இங்கும் தோண்டி பார்த்து அளவீடு செய்து உறுதி படுத்திய பிறகு, எந்தெந்த தூண்களுக்கு எத்தனை அடி ஆழம் வரை குழி தோண்டி கான்கிரீட் தூண் அமைக்க வேண்டும் என்பதை குறிப்பிடுவோம். அதனடிப்படையில் தூண்கள் நிறுவப்படும். கொக்கிரகுளத்தில் மொத்தம் 11 தூண்கள் அமைக்கப்படுகின்றன” என்றனர். 

மேலும் செய்திகள்