அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டம்

அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி நாகையில் 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 15 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-11 01:50 GMT
நாகப்பட்டினம்,

ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலையா, மாவட்ட பொருளாளர் மணி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனிமணி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாத ஊதியமாக ரூ.11 ஆயிரத்து 236.16-ம், துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரத்து 234.16-ம் வழங்க அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால் தற்போது மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 720-ம், துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 560-ம் வழங்கப்படுகிறது.

எனவே, அரசு அறிவித்தப்படி ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் 1.1.2016 முதல் ஓய்வுபெறும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் பணிக்கொடையும், மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 15 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

மேலும் செய்திகள்