சிவகங்கை ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு

சிவகங்கை ரெயில் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர போர்டில் உள்ள இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளன.

Update: 2018-04-11 00:14 GMT
சிவகங்கை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள், சாலை மறியல் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. போராட்டத்தின் ஒருபகுதியாக மத்திய அரசு அலுவலகங்களான தபால் நிலையம், ரெயில் நிலையம், சுங்கச்சாவடி உள்ளிட்டவற்றின் முன்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் உள்ள மைல் கல்லில் உள்ள இந்தி எழுத்துகளை மர்ம ஆசாமிகள் கருப்பு மையால் அழித்தனர்.

இந்தநிலையில் சிவகங்கை ரெயில் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர போர்டில் உள்ள இந்தி எழுத்துகளை மர்ம நபர்கள் கருப்பு மையை பூசி அழித்துள்ளனர். மேலும் சிவகங்கை ரெயில் நிலையத்தில் உள்ள ஊர் அறிவிப்பு பலகையில் ‘சிவகங்கை‘ என்று இந்தியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளை கருப்பு மையால் அழித்துவிட்டு, காவிரி என்று எழுதியுள்ளனர்.

மானாமதுரை ரெயில்வே போலீசார் இந்தி எழுத்துகளை அழித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்