மதுரை, தூத்துக்குடி உள்பட 14 ரெயில் நிலையங்களில் செல்போன் மூலம் சாதாரண டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்

மதுரை, தூத்துக்குடி உள்பட 14 ரெயில் நிலையங்களில் வருகிற 14-ந் தேதி முதல் செல்போன் மூலம் சாதாரண டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Update: 2018-04-11 00:14 GMT
மதுரை,

இந்திய ரெயில்வேயில் முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகளை செல்போன் மூலம் எடுக்கும் வசதி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக யூ.டி.எஸ். என்ற செயலி வடிவமைக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு, ஐ.போன் உள்ளிட்ட செல்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தென்னக ரெயில்வேயில் சென்னையில் மட்டும் புறநகர் மின்சார ரெயில்களுக்கான டிக்கெட் இந்த செயலி மூலம் எடுக்கும்படி வடிவமைக்கப்பட்டது. இது தினமும் மின்சார ரெயில்களில் சென்று வரும் பயணிகளுக்கு பயன்தருவதாக இருந்தது.

எனவே, இந்த திட்டத்தை தென்னக ரெயில்வே முழுவதும் விரிவுபடுத்தும்படி பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சேலம் ரெயில்வே கோட்டத்தில் பாசஞ்சர் ரெயில்களில் செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் மதுரை உள்ளிட்ட தென்னக ரெயில்வேக்கு உள்பட பாலக்காடு, திருச்சி, திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டங்களிலும் செயல்பாட்டுக்கு வந்தது.

ஆனால், சென்னையை தவிர, பிற ரெயில்வே கோட்டங்களில் செல்போன் செயலியில் டிக்கெட் எடுக்கும்போது, எஸ்.எம்.எஸ். மூலம் குறியீடு அனுப்பப்படும். அந்த குறியீட்டை ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தில் உள்ளடு செய்ய வேண்டும். தானியங்கி எந்திரம் மூலம் பயணிக்கு டிக்கெட் வழங்கப்படும்.

இந்த நிலையில் மதுரை கோட்டத்தில் மதுரை, தூத்துக்குடி உள்பட 14 ரெயில் நிலையங்களில் செல்போன் மூலம் நேரடியாக ஆன்லைன் டிக்கெட் பெறும் முறை வருகிற 14-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் செல்போன் மூலம் சாதாரண டிக்கெட், சீசன் டிக்கெட், பிளாட்பார டிக்கெட் ஆகியவற்றை எடுக்கலாம். இது குறித்த தொழில்நுட்ப ஆலோசனையில் வர்த்தக பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தென்னக ரெயில்வேயில் யூ.டி.எஸ். செயலி மூலம் கடந்த 2016-17-ம் நிதியாண்டில் 33 கோடியே 98 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளது. இதில் ரூ.404 கோடியே 45 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது. 2017-18-ம் நிதியாண்டில் 34 கோடியே 39 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ.408 கோடியே 55 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது.

சென்னை கோட்டத்தில் மட்டும் கடந்த ஜனவரி மாதம் வரை 10 லட்சத்து 31 ஆயிரம் பயணிகள் இந்த செயலி மூலம் டிக்கெட் எடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்