காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வக்கீல்கள் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வக்கீல்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-11 00:04 GMT
திருவள்ளூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்கங்களின் தலைவர்கள் ராஜராஜன், ஸ்ரீமுருகா, ஸ்ரீனிவாசன், தாமோதரன், ரவிச்சந்திரன், ஆதாம், வக்கீல்கன் இ.கே.ரமேஷ், ஸ்ரீதர், ராஜேந்திரன், பி.கே.நாகராஜ், பிரதாப்சிங் என அனைத்து வக்கீல்கள் சங்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடம் எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவில் அணிவகுத்து நின்றன.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மறியல் போராட்டம் காரணமாக அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்